No results found

    பச்சை நிறமாக மாறிய வீராணம் ஏரி தண்ணீர்- பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்


    கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீனஸ் மதகில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. தூரமும் 5 கி.மீ., பரப்பளவில் 32 பாசன மதகுகளை கொண்டுள்ளது. 1,468 மில்லியன் கனஅடி. (47.50 அடி) கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 1,300 மில்லியன் கனஅடி (46 அடி) தண்ணீர் உள்ளது.

    இந்த ஏரிமூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. தற்போதுவரை சென்னைக்கு 73 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. கடந்த 17-ந் தேதி மேட்டூரில் இருந்து 2,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து சேருகிறது.

    இந்நிலையில் தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதனை கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரி நீரை மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஏரி நீர் நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஏரி நீர் நிறம் மாறியிருப்பதால், விவசாயிகள் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், பொதுமக்கள், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தவும் அச்சப்படுகின்றனர். எனவே, ஏரியின் நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணத்தை ஆராய்ந்து பொதுமக்கள், விவசாயிகளின் அச்சத்தை போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال